பழங்காலத் தெய்வ நம்பிக்கை
பழங்காலத் தெய்வ நம்பிக்கை மனிதன் உணவுக்காக மிருகங்களை வேட்டையாடிக் காட்டு மிராண்டியாக வாழ்ந்த காலகட்டத்தில் இடி, மழை, மின்னல், புயல், வெள்ளம் முதலிய இயற்கை உற்பாதங்களைக் கண்டு பெரிதும் பயந்தான். அருவிகள், ஆறுகள், காடுகள், மரங்கள், மலைகள் முதலியவற்றைக் கண்டு அஞ்சினான். அவற்றால் தன் உயிருக்குத் தீங்கு நேருமோ என அஞ்சிய அவன் “என்னை ஒன்றும் செய்து விடாதே; என்னைக் காப்பாற்று” என்று அவற்றைத் தொழுது வணங்கினான். இவற்றை மட்டுமல்லாது, ஆபத்து விளைவிக்கும் கொடிய காட்டு விலங்குகளான சிங்கம், புலி, யானை, கொடிய நச்சுப் பாம்புகள் முதலியவற்றையும் அச்சத்தால் வணங்கினான். “கரந்து பாம்பொடுங்கும் பயம்பு மாருளவே குறிக் கொண்டு மரங்ங் கொட்டி நோக்கிச் செறிதொடி விறலியர் கைதொழுஉப் பழிச்ச வறிது நெறி யொரீஇ வலஞ்செயாக் கழிமின்” - மலைபடுகடாம் 199-202 (பரலையுடைய பள்ள நிலத்தின் பரப்பிலே பாம்புகள் மறைந்து கிடக்கும் குழிகள் உள்ளன. அவற்றை மனத்தாலே குறித்துக் கொண்டு விலங்கிற்கு மரத்திலே கொட்டிப் பார்த்து, செறிந்த வளையலையுடைய விறலியர் அப் பாம்பு மனம் மகிழும்படி கையால் தொழுது வணங்கிப் போவீராக) என்ற பாணனின் கூற...